அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் துவிச்சக்கரவண்டி தரிப்பிட திறப்பு விழா

வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் 2000 ஆம் வருடம் உயர்தரம் கற்ற பழைய மாணவர் சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் த.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திருமதி எம்.மயூரன் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம்,மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் உப பீடாதிபதி ரி.கணேசரெட்ணம், கார்மேல் பற்றிமா கல்லூரி பிரதி அதிபர் ஏ.சுமன் ஓய்வு நிலை அதிபர் கே.எஸ்.கோபாலபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2000 ஆம் வருடம் உயர்தரம் கற்ற பழைய மாணவர்களின் எட்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதிப்பங்களிப்புடன் பழைய மாணவர்களின் ஆளனி உதவியுடன் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட தரிப்பிடத்தில் 400 இற்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் நிறுத்தி வைக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் வரவேற்க்கப்பட்டனர். பின்னர் துவிச்சக்கரவண்டி தரிப்பிட பெயர்பலகையை திறந்து வைத்ததுடன் நாடாவினை வெட்டி தரிப்பிடத்தை திறந்து வைத்தனர்.
இதன் பின்னராக இடம்பெற்ற கூட்டமொன்றிலும் கலந்து கொண்டனர்.
பழைய மாணவர் கே.அசோக்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் பலரும் உரையாற்றினர். இங்கு உரையாற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் குறித்த பயன்மிகுந்த அத்தியாவசியமான தரிப்பிடத்தை அமைக்க முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி பேசினார். அத்தோடு பாடசாலைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வருகின்றவர்களுக்கு தான் பூரண ஒத்துழைப்பை வழங்க காத்திருப்பதாகவும் கூறினார்.
நிகழ்வின் இறுதியில் பழைய மாணவர் சங்க பொருளாளர் யோ.இதயதினேஸ் அதிதிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் நிர்மாணப்பணிக்கு நிதியுதவி வழங்கி அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறினார்.