சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குள் 1166வீதிகள் புனரமைக்க வேண்டிய தேவை-தவிசாளர் வாமதேவன் சுட்டிக்காட்டு

த.சுபேசன்
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குள் மேலும் 1166 வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுவதாக பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டிற்கான பாதீடு 24வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த 4வருட கால சபைச் செயற்பாட்டில் நான் எந்தவிதமான அரசியல் வேறுபாடுகளும் அற்ற நிலையில் ஒரு தவிசாளராக சகல உறுப்பினர்களையும் சமமாக மதித்து செயலாற்றியுள்ளேன். அதுவே பாதீடு எதிர்பின்றி ஏகமனதாக நிறைவேறக் காரணம்.சகல உறுப்பினர்களும் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போதும் சகல உறுப்பினர்களுடைய ஒத்துழைப்புடன் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டு மக்களின் சிரமங்களை எம்மால் முடிந்தளவிற்கு போக்கி இருந்தோம். இரண்டு வருட கால கொவிட் நிலைமைக்கு மத்தியிலும் கூட நிர்வாக ரீதியாக பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும் எமது சக்திக்கு ஏற்ற வகையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
எம் தேவை என்பது மலை போல் எம் முன்னே குவிந்து கிடக்கின்றது.சபை எல்லைக்குள் மேலும் 1166 வீதிகள் புனரமைப்புச் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.வீதிப் புனரமைப்பு,மக்களுக்கான கட்டிட அனுமதி உள்ளிட்ட மக்கள் சேவைகளை இயலுமானவரை விரைவுபடுத்தி செயலாற்றுகின்றோம். எமது சபைச் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க சபை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது போன்று பொதுமக்களும் எமது நிதி நிலைமை ,வளப் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது எமது கடமை.அந்தக் கடமையில் இருந்து சிறிதளவேனும் விலக மாட்டோம்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.