கல்முனையிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; சில இடங்களில் இல்லை எனத் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, நிந்தவூர், மருதமுனை போன்ற இடங்களில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பெற்றோல் மற்றும் டீசல் பெறுவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.

அதேவேளை, கல்முனையிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் சாய்ந்தமருதிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் புதன்கிழமை (17) பெற்றோல், டீசல் இல்லை என்ற அறிவித்தல் போடப்பட்டிருக்கிறது.

இதனால் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலானோர் முண்டியடிப்பதால் இப்பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.