ஒய்வூதிய அதிகரிப்புக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன?

(அஸ்லம் எஸ்.மௌலானா)

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்குரிய ஓய்வூதிய அதிகரிப்பை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த வேண்டுமென தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவரும் ஓய்வுநிலை கல்விப்  பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மது முக்தார், திறைசேரியின் செயலாளரிடம் இத்தகவலைக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளமானது 107 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
இது நான்கு கட்டங்களாக அவர்களுக்கு வழங்கப்பட்டு 2020 ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது. இவர்களுள் 2016 முதல் 2019 வரை ஓய்வுபெற்றோருக்கு அவர்கள் எந்த சம்பள படிநிலைக்கு உரியவர்களோ அந்த சம்பள படி நிலைக்குரிய ஓய்வூதிய அதிகரிப்பு 2020 ஜனவரி முதல் வழங்கப்படும் என சம்பள அதிகரிப்பு தொடர்பான பொது நிருவாக அமைச்சின் 03/2016 ம் இலக்க சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கான நிதி ஒதுக்கீடு 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாக 2019 ம் ஆண்டு பொது நிருவாக அமைச்சின் 35/2019 ம் இலக்க சுற்று நிருபம் மூலம் 2020 ஜனவரி முதல் வழங்க திறைசேரியின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டது.

ஆனால் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து திடீரென 2020 ஜனவரியில் 35/2019 (1) ஆம் இலக்க சுற்று நிருபத்தின் மூலம் மேற்படி கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டது. இச்சுற்றறிக்கையும் திறைசேரி இணக்கத்திலேயே
வெளியிடப்பட்டது.

நல்லாட்சி காலத்தில் திறைசேரியின் பிரதிச் செயலாளராக இருந்த நீங்கள் தற்போது திறைசேரியின் செயலாளராக உள்ளீர்கள். எனவே 2016 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட இந்நிதிக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக கேட்கப்பட்டுள்ளது