கிட்டுவும் எம்.ஐ.எம்.மொஹிதீனும் வெளியிட்ட கூட்டறிக்கை

-முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அப்துல் மஜீத் அனுதாபம்-

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படும்போது முஸ்லிம்களின் உரிமைககள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதில் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்ட எம்.ஐ.எம்.மொஹிதீனின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் சமூக, அரசியல் வரலாற்று ஆய்வாளருமான எம்.ஐ.எம்.மொஹிதீனின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

1983 ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை கூர்மையடைந்து சென்ற காலப்பகுதியில் இந்திய ராஜதந்திரிகளான பி.பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி, இணை அமைச்சர்களாக இருந்த பி.சிதம்பரம், நத்வாத் சிங் போன்றவர்கள் இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவர்களாக கொழும்பு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கிழக்கிழங்கையை பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் எம்.பி.க்களை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன இப்பேச்சுவார்த்தைகளில் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்திருந்தார். அதேவேளை முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் கவுன்ஸில் எனும் அமைப்பு இந்தியா சென்று ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது.

அதன்போது முஸ்லிம் தரப்பில் முக்கிய நபராக எம்.ஐ.எம்.மொஹிதீன் செயற்பட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் விடுதலைப் புலிகளின் அன்றைய முக்கியஸ்தரான சதாகாசிவம் கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்படும் கிட்டு அவர்களும் முஸ்லிம் கவுன்சில் சார்பாக   அவர்களும் கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையும் பட்சத்தில் முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைவடைவதனால் கிழக்கில் உள்ள குடிப்பரம்பலுக்கு ஏற்ப சகல துறைகளிலும் முஸ்லிம்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்ற உடன்பாடு குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டுமின்றி 1986.10.05ஆம் திகதி அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முஸ்லிம் அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பங்கேற்புடன் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையுமாயின் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலும் எம்.ஐ.எம்.மொஹிதீன் அவர்களின் பங்களிப்பு சிலாகித்துக் கூறப்பட வேண்டியதாகும்.

அத்துடன் ஆட்சி அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்ற புத்தகம் உட்பட வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் வரலாற்று வாழ்விடங்கள் சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றையெல்லாம் தொகுத்து ஆவணப்படுத்தி, சமூகத்திற்கு பெரும் சேவையாற்றியுள்ளார்.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒரே குரல் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக 1995ஆம் ஆண்டு தனது முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் கட்சியைக் கலைத்து விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தன்னை இணைத்துக் கொண்டு, அஷ்ரப்புடன் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட சமூகப் பணிகளை முன்கொண்டு சென்றார். காற்றையும் காலத்தையும் வென்று நிற்கும் அன்றலந்த மலர்போல் எம்.ஐ.எம்.மொஹிதீனின் நாமம் என்றென்றும் வீசிக்கொண்டே இருக்கும்- என்று அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.