உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் அவதானிக்கப்படின் சட்ட நடவடிக்கை

பாறுக் ஷிஹான்

உணவு சீர்கேடுகள் மற்றும்  உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் அவதானிக்கப்படின் சட்ட நடவடிக்கை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர் இன்று (15) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொலைபேசி வாயிலாக  தொடர்பு கொண்டு  எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

உணவகங்களில் சுகாதார சீர்கேடு என்பது தொடர்ச்சியாக எமக்கு கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடு ஆகும்.தற்போது நீண்ட இடைவேளையின் பின்னர் கொரோனா அனர்த்த நிலைமையினை அடுத்து பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளது.இந்நிலையில் குறித்த உணவு சீர்கேட்டினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எமது கல்முனை பிராந்தியத்தில் உணவகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றது.இதனால் அதிகளவான பொதுமக்கள் உணவுத்தேவைகளை இவ்வுணவகங்களில் பூர்த்தி செய்வதை அவதானிக்க முடிகின்றது.கடந்த வருடங்களிலும் அதிகளவான சுகாதார சீர்கேடு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.இருந்த போதிலும் கொரோனா அனர்த்த நிலைமையிலும் கூட இவ்விடயத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.
எமது பிராந்தியத்தில் உணவு பாதுகாப்பிற்கென தனிப்பிரிவும் தொற்றுநோய் பிரிவும் தனித்தனியே இயங்குகின்ற நடைமுறை   காணப்படுகின்றது.அந்த வகையில் இவ்வாறான உணவு சுகாதார சீர்கேடுகளை தடுப்பது  எமக்கு பாரிய பொறுப்பாக உள்ளது.சவால்களுடன் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.இதற்காக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள்  பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டு அன்றாடம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவு சீர்கேடுகள் மற்றும்  உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் அவதானிக்கப்படின் சட்ட நடவடிக்கை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் கூறினார்.