அக்கரைப்பற்று சின்னப்பனங்காடு விபத்தில் முதியவர் ஒருவர் பலி

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று சின்னப்பனங்காடு நாககாளியம்மன் ஆலயத்திற்கு அன்மித்த பிரதான வீதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் சின்னப்பனங்காட்டை சேர்ந்த பூபாலபிள்ளை நவனீதராஜா எனும் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரே பலியாகியுள்ளார்.
அலிக்கம்பை பிரதேசத்தில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே சென்று கொண்டிருந்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் வேகமாக வருகை தந்தாக சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்தார்.

இதேநேரம் நாககாளியம்மன் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதியை நோக்கி பலியான வயோதிபர் சென்றதாகவும் அவரின் துவிச்சக்கரவண்டியின் பின்புறமாகவே மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தில் மோதுண்ட வயோதிபர் வீதியின் அருகில் இருந்த வடிகானின் கட்டில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். இதேநேரம் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆயினும் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் பலியான நிலையில் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போக்குவரத்து பொலிசார் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் விசாரணையினையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேநேரம் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியையும் பார்வையிட்டனர்.
இது இவ்வாறிருக்க அன்மைக்காலமாக வீதிகளில் பாதுகாப்பின்றியும் கண்மூடித்தனமாகவும் தலைக்கவசம் இன்றியும் மூவருக்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது அதிகரித்து வரும் நிலையில் பாடாசாலை நேரங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.