அரசாங்கத்தினால் தரப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகளை நூறு வீதம் நம்ப முடியாது

(சுமன்)

தற்போது எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானம் அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதினாலும், வருகின்ற தை மாதம் எமது சம்பளம் அதிகரித்து வரும் வரை அரசாங்கத்தினால் தரப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகளை நூறு வீதம் நம்ப முடியாது என இலங்கை ஆசியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த 09ம் திகதிய போராட்டத்தின் போது உயிர்நீத்த வருணி ஆசிரியைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளில் வெள்ளைக் கொடி கட்டி அஞ்சலி செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்றையதினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இவ் ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.கோகுலறமணன், செயலாளர் கிருபைராஜா, மட்டக்களபப்பு வலய இணைப்பாளர் திருமதி த.தயானந்தி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக அதிபர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த வகையிலே 24 வருட சம்பள முரண்பாட்டினைத் தீர்க்கும் முகமாக பாரிய அளவிலான போராட்டங்களை ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில் தற்போது அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டிற்குள் வந்திருக்கின்றது. சுபோதினி அறிக்கையின் பிரகாரம் முன்றில் ஒரு பங்கினைத் தருவதாக உறுதியளித்திருக்கின்றது.

அதனடிப்படையில் வழமையான வரவு செலவுத் திட்டத்தை விட முப்பதாயிரம் மில்லியன் மேலதிக தொகையை ஒதுக்கியிருக்கின்றது இந்த அரசாஙகம். சுபோதினி அறிக்கையின் பிரகாரமுள்ள மேலும் இரண்டு மடங்கினையும் எதிர்காலத்தில் தருவதாகவும் உறுதியளித்துள்ளது.

அன்பான அதிபர் ஆசிரியர்களே நீங்கள் இதுவரை எங்களுடன் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியிருந்தீர்களோ, அதே போல் அரசாங்கத்தினால் தரப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகள் எதிர்காலத்தில் நிறைவேறாத சந்தார்ப்பத்தில் மீண்டும் போராடுவதற்கு எங்களோடு தொடர்ச்;சியாகக் கைகோர்த்து நிற்க வேண்டும்.

நாங்கள் எதிர்பார்த்ததில் ஒரு பங்கினைத் தருவதாகவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற காலத்தில் அது அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தை மாதம் எமது சம்பளம் அதிகரித்து வரும் வரை நாங்கள் எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது, சொல்லப்பட்ட விடயத்தை நூறு வீதம் நம்பவும் முடியாது. தற்போது எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நாங்கள் கருதுகின்றோம்.

நடைபெற்றுக் கொண்டிருந்த எமது போராட்டங்களின் கலந்து கொண்டிருந்த அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, வடக்கு கிழக்கு மட்டுமல்லாது நாடுபூராகவும் மிகவும் நேர்த்தியாக எமது போராட்டங்களை வழிநடத்திய தலைமைகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். விசேடமாக எமது போராட்டங்களை வெளிப்படுத்திய ஊடகங்கள் ஊடகவியலாளர்களுக்கும் நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. சுபோதினி அறிக்கையை முன்வைத்து எமது போராட்டத்தை நாங்கள் மேலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம். இதற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.

போராடித்தான் எங்களது விடயத்தைப் பெறவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டதன் விளைவாக எமது போராட்டங்கள் இடம்பெற்றன. போராடி வெற்றியும் கண்டிருக்கின்றோம். இந்தப் போராட்த்தில் இம்முறை பல பெண் ஆசிரியர்கள் முன்வந்து போராடினார்கள் என்பது குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அந்தவகையில், கடந்த 09ம் திகதி இடம்பெற்ற எமது பாரிய போராட்டத்திலே கலந்து கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்த ஏ.டி. வருணி அசங்க ஆசிரியையை நினைவு கூருவதுடன், அவரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அனைத்து ஆசிரியர்களின் அஞ்சலியையும் தலைவணங்கிச் செலுத்துகின்றோம்.

அத்துடன், வருகின்ற திங்கட்கிழமை 15ம் திகதி மட்டக்களப்பில் இருக்கும் அனைத்துப் பாடசாலைகளிலும் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டு காலை ஒன்றுகூடலின் போது மௌன அஞ்சலியும் செலுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை அனைத்துப் பாடசாலை அதிபர் ஆசிரியர்களிடம் விடுக்கின்றோம் என்று தெரிவித்தனர்.

மேலும் ஊடக சந்திப்பிற்கு முன்னர் கடந்த 09ம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த ஆசிரியை ஏ.டி வருணி அவர்களுக்கு மெழுகுவாத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.