இறால் பாலம்! கையெழுத்து வேட்டை.

(அ . அச்சுதன்) மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள இறால்ப்பாலத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் இதுவரை எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகைதந்து பார்வையிடவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதன் தொடர் நிகழ்ச்சியாக இன்று (12 ) வெள்ளிக்கிழமை அனர்த்தம் நிகழ்ந்த இடமான இறால் பாலத்தின் அருகாமையில் இறால்ப்பாலத்தைப் புனரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதப்பட்ட மகஜரில் பொதுமக்கள் கையொப்பமிட்டுவருகின்றனர்.
குறித்த பாலத்தினூடாக பயணிக்கும் அனைவரும் இம்மகஜரில் ஆர்வத்துடன் கையொப்பங்களை இட்டுவருகின்றனர்.
நேற்றைய தினம் சம்பவ இடத்துக்கு விரைந்த கட்டைபறிச்சான் வட்டார பிரதேச சபை உறுப்பினர் திரு.ந.கரிஹரகுமார் அவர்கள் பிரதேச சபைத் தவிசாளரின் உதவியுடன் பொதுமக்களுடன் இணைந்து பாலத்தை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இன்றும் மக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையிலும் பங்கெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.