ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

வி.சுகிர்தகுமார்

  ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சபையின் 44 ஆவது மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் ரி.கிறோஜாதரன் தலைமையில் சுகாதார வழிமுறைகளுக்கமைய   இடம் பெற்றது.
இதன்போதே வரவு செலவுத்திட்டம் பகிரங்க வாக்கெடுப்பின் பின்னராக நிறைவேற்றப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் தமிழர் விடுதலை கூட்டணி 6 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 5 உறுப்பினர்களையும் ஜக்கிய தேசிய கட்சி 4 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும் கொண்டதாக மொத்த உறுப்பினர்களை உள்ளடக்கியது. இந்நிலையில் உறுப்பினர்கள் 16 பேரும் இன்றைய சபை அமர்வில்  பேர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளரினால் சபையில் முன் வைக்கப்பட்டது.
அதனையடுத்து ஒதுக்கீடுகள் சம்மந்தமாக வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றதுடன் சபை உறுப்பினர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பின்னர் பகிரங்க வாக்கெடுப்பும் இடம் பெற்றது.
இதில் 13 பேர் ஆதரவாகவும் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஆயினும் இறுதியில் 10 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த வரவு செலவுத்திட்டத்தில் அனர்த்த நிலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனவும் அபிவிருத்தி திட்டங்களுக்காக அனைத்து பிரிவுகளுக்கும்; நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தே மூன்று உறுப்பினர்கள் குறித்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக  வாக்களித்திருந்தனர்.
இதேநேரம்; தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது வரவு செலவு திட்டம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளிலும்  வீதிகள் அபிவிருத்தி ,மின்சாரம்,கல்வி,சுகாதாரம் ,வாழ்வாதாரம்,அத்தியவசிய சேவை போன்ற துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  அபிவிருத்தி செய்யப்படும் எனவும்  தெரிவித்தார்.