பொத்துவில் வேகாமம் காணி விரைவில் பொது மக்களிடம் கையளிப்பு 

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் நடவடிக்கை
 
நிந்தவூர் நிருபர்
ஏ.பி.அப்துல் கபூர்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக மிக விரைவில் பொத்துவில் பிரதேச வேகாமம் விவசாய காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வேகாமம் காணி மீட்பு தொடர்பாக ஆராயும் விசேட அதிகாரிகள் குழு கடந்த வெள்ளிக்கிழமை (12) பொத்துவிலுக்கு விஜயம் செய்ததுடன் பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணி மதிப்பு தொடர்பான கூட்டத்திலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருட சிறுபோகத்தின்போது செய்கை பண்ணக்கூடிய வகையில் காணப்படுகின்ற வேகாமம் காணிகளை விடுவிப்பதாக இக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1956 ம் ஆண்டு காலப்பகுதியில் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் 1990 இல் யுத்தம் தொடங்கும் வரை பொதுமக்களால் குறிப்பிட்ட காணிகள் செய்கை பண்ணப்பட்டு வந்தது.
ஆனால் யுத்தகாலத்தில் குறித்த காணிகளிற்கு சென்று விவசாயம் செய்ய முடியாமல் இருந்த வேகமம் காணிகளை 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து செய்கை பண்ணச் சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதுதான் இக்காணிகன் 2006 இல் வர்த்தமானி அறிவித்தல் மூலம்  வனாந்தரமாக பிரகடனிக்கப் பட்டிருக்கின்ற விடயம் குறித்த காணி உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.
அன்றிலிருந்து இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள வேகாமம் காணிப் பிரச்சினையை தீர்வினை நோக்கி சாமர்த்தியமாக நகர்த்திச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு விவசாயிகள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர். காணி விடுவிப்பு தொடர்பாக பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில்  வனாந்தரமாகிவிட்ட காணிகளினை தவிர்த்து  செய்கை பண்ணக்கூடிய வகையில் காணப்படுகின்ற சுமார் 450 ஏக்கர் காணிகளை அடுத்த போகத்திற்கு முன்னர் விடுவிக்கும் வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.