மன்னாரில் தொடர்ந்து 05 பாதுகாப்பு நிலையங்களில் 366 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்து  தற்பொழுது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் ஆறு இடங்களில் இவை ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டுள்ளன என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக அதிகமான தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தினால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றது.

கடந்த 01.11.2021 தொடக்கம் 12.11.2021 வெள்ளிக் கிழமை வரை மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் மடு தவிர்ந்த ஏனைய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 4942 குடும்பங்களில் 17846 நபர்கள் மழை வெள்ளத்தினால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இவர்களில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 4448 குடும்பங்களைச் சார்ந்த 16087 நபர்களும் 02 வீடுகளும் பகுதி பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 340 குடும்பங்களைச் சார்ந்த 1092 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 08 குடும்பங்களைச் சார்ந்த 39 நபர்களும் 01 வீடும் பகுதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் 166 குடும்பங்களைச் சார்ந்த 628 நபர்கள் இவ் வெள்ளத்தால் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும்

ஏற்கனவே வெள்ளப் பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து வந்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 06 பாதுகாப்பு தங்குமிட இடங்களில் தற்பொழுது இது 05 ஆக குறைந்துள்ளன.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் தற்பொழுது 05 பாதகாப்பு தங்குமிடங்களில் 106 குடும்பங்களைச் சார்ந்த 366 நபர்கள் மாத்திரம் தங்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.

அத்துடன் மன்னாரில் தற்பொழுது மழை வீழ்ச்சி குறைந்துள்ளமையால் ஏற்கனவே மன்னார் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளத்தில் மூன்று அங்குலம் வான் பாய்ந்த நீர் தற்பொழுது இது இரண்டு அங்குலமாக குறைந்துள்ளதாக மன்னார் மற்றும் வவுனியா நீர்பாசன பணிப்பாளர் என்.யோகராஐh தெரிவித்தார்.

அத்துடன் மல்வத்த ஓயாவிலிருந்து மன்னார் கட்டுக்கரைக்குளத்துக்கு வரும் நீர் இங்கு நிலவிய மழை வெள்ளம் காரணமாக தொடர்ந்து கடலுக்கு திருப்பப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.