மன்னாரில் பரவலாக பெய்துவரும் மழையால் தாழ்ந்த பகுதி மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து சில தினங்களாக நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள நீரால் மக்கள் பாதிப்படைந்து வரும் நிலை காணப்படுகின்றது.

மன்னார் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவி பணிப்பாளர் திலீபன் தெரிவிக்கையில் திங்கள் கிழமை (08.11.2021) வரை மழை வெள்ளம் காரணமாக 154 குடும்பங்களைச் சார்ந்த 500 பேருக்கு மேல் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் இதுவரை இடம்பெயந்தவர்களுக்கான இடைத்தங்கல் முகாம் எதுவும் அமைக்கவில்லையெனவும் இடம்பெயர்ந்தவர்கள் அருகிலுள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப் பகுதியில் அதிகமான தாழ்ந்த பிரதேசங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளபோதும் தலைமன்னார் பியர் வடக்கு, கிழக்கு, மேற்கு, எமில்நகர், நானாட்டான் மோட்டக்கடை, கட்டைக்காடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கிழக்கு. மேற்கு பகுதிகளிலுள்ள தாழ்ந்த பகுதிகளில் வெள்ளநீரால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிய குளங்களுக்கும் பாதிப்புக்கள் எற்பட்டுள்ளதாகவும் கட்டக்காட்டிலுள்ள குளத்தின் துளசும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதால் பிரதேச சபையானது மழைநீர் கட்டுப்பட்டு நிற்கும் இடங்களை துப்பரவு செய்து நீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.