மாளிகைக்காடு நிருபர்
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸின் அரசியல் உயர் பீட உறுப்பினரும், சட்ட விவகார கொள்கை அமுலாக்கல் செயலாளரும், தேசிய காங்கிரஸின் சார்பிலான கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான, மருதமுனை பிரதேச பிரதானி பிரபல கவிஞர் எழுத்தாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் (அலறி) பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் சட்டத்தரணி பாறூக் சாஹிப்பின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் குருணாகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அக்கட்சியில் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் சமுகத்தின் குரலாக தொடர்ந்தும் ஒலித்து வருவதாகாகவும் தனக்கு எதிராக புனையப்படும் சகல சதிகளையும் முறியடித்து மக்களின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் உள்ளதாகவும் அவரது கரத்தை பலப்படுத்தி மக்கள் பணிக்கு அவருடன் இணைந்து செயலாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.