சொறிக்கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியை அண்மித்த ஆற்றுக்குள் மூன்று நாள் சிசு மீட்டெடுப்பு; சந்தேக நபர் பொலிஸாரால் கைது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் இன்று (05.11.2021) மீட்கப்பட்டது.

சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பகுதிக்கு சந்தேக நபருடன் விரைந்த போலிசார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர், கடற்படையினர் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் வீசப்பட்ட சிசுவை மீட்டெடுத்தனர்.

சந்தேகநபரான பக்கி தம்பி அஸ்பர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தையை பெற்றெடுத்த 19 வயதுடைய அவரது மகள் அஸ்வர் பாத்திமா பாஸ்லூன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய மற்றொரு மகளான அஸ்பர் பாத்திமா பத்ரிசாh என்பவர் தனது சகோதரியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு உதவி செய்திருக்கிறார்.

தனது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையை யே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன்,  பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.