வீதி விபத்துக்களை தவிர்ப்போம் விழிப்புணர்வு 150 கிலோ மீட்டர் மாபெரும் சைக்கிள் பேரணி

மருதமுனை றைடர்ஸ் ஹப் ( Riders hub) சைக்கிளிங் கிளப் நடாத்தும் வீதி விபத்துக்களை தவிர்ப்போம் விழிப்புணர்வு 150 கிலோ மீட்டர் மாபெரும் சைக்கிள் பேரணி (மருதமுனை–பொத்துவில்).

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

முன்னைய காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது வாகன விபத்துக்கள்  அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. வீதிகளில் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 13.5 இலட்சம் பேர் உலகில் கொல்லப்படுகின்றனர் என்றும், அவர்களில் பெரும்பான்மையோர் இளம் வயதினர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

‘வீதி விபத்துக்களை தடுப்போம்’ எனும் உன்னத நோக்கத்தோடு மருதமுனை றைடர்ஸ் ஹப் ( Riders hub) சைக்கிளிங் கிளப் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் விழிப்புணர்வு சைக்கில் ஓட்ட பேரணி எதிர்வரும் சனிக்கிழமை (06) மருதமுனையில் ஆரம்பமாகி சுமார் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து பொத்துவில் பிரதேசத்தை சென்றடைந்து மறுநாள்(07) பொத்துவிலில் இருந்து மருதமுனையை வந்தடையவுள்ளது.

வீதி விபத்துக்கள் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. இலங்கையில் நாளொன்றுக்கு வீதி விபத்துக்களினால் 6 தொடக்கம் 8 பேர் உயிரிழப்பதாகவும், மூன்று மணித்தியாலங்களுக்கு ஆகக்குறைந்தது ஒரு விபத்தும் ஏற்படுவதாக பொலிஸ் அறிக்கைகள் கூறுகின்றன. 2011ம் ஆண்டு 2011 ஆகக் காணப்பட்ட வீதி விபத்துக்கள், 2018ம் ஆண்டு 2500 ஆக பெருகியிருந்தன. வீதியில் ஏற்படுகின்ற விபத்துக்களினால் இறப்பவர்களை விட மூன்று தொடக்கம் நான்கு மடங்குக்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும், இவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் கணிசமானோர் நிரந்தரமான அங்கவீனத்திற்கும் அல்லது விசேட தேவையுடையவர்களாக மாறிவிடுகிறார்கள் எனவும், இவர்களின் வைத்திய சிகிச்சைக்கு மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு மத்தியில் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் அரச நிதி செலவாகின்றன என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

கொவிட்-19 பெரும்பரவல் தொற்று காலத்தில் பெருமளவான கொரோனா தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டியிருக்கின்ற காலத்தில் வீதி விபத்தக்களினால் பாதிக்கப்பட்ட அதிகமானவர்கள்  வைத்தியசாலைகளில் இடப் பற்றாக்குறையை மேலும் தீவிரம் ஆக்குகின்றன. சமூக, பொருளாதார, உடலாரோக்கியத்திற்கு சவாலாக மாறியுள்ள  வீதி விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், காயங்கள், அங்கவீனங்கள் தவிர்க்கப்படவும், குறைக்கப்படவும் வேண்டும். இதற்கு வாகன சாரதிகள், நடத்துனர்கள், உதவியாளர்கள், பாதசாரிகள் என அனைவரும் கூட்டுப் பொறுப்புடையவர்களாக மாறவேண்டும்.

வீதி ஒழுங்குகளை, சட்டங்களை மதிப்பவர்களாகவும், மீறிச் செயற்படாதவர்களாகவும், எப்போதும் மற்ற வாகனங்களை முந்தியே செல்லவேண்டும் என்ற மனப்பான்மை இல்லாதவர்களாகவும், தங்களது வாகனங்களில் வானொலி, தொலைக்காட்சி சாதனங்களின் ஒலியை அளவுக்கதிகமாக அதிகரிக்காதவர்களாகவும், போதிய நீண்ட நேர ஓய்வின்றியும், போதைப்பொருட்கள் பாவித்துக் கொண்டும், கையடக்கத் தொலைபேசிகளில் உரையாடிக் கொண்டு வாகனங்களை செலுத்தாத வர்களாகவும் இருக்க வேண்டும்.

பாதசாரிகளும், வீதி ஒழுங்குகளையும், சட்ங்களை மதிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தாலேய வீதி விபத்துக்களையும், அதன் பாதிப்புகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
வாகன சாரதி வாகனத்தை வீதிக்கு கொண்டு வரும்போது, உயிர்களுடனும், உயிர்களுக்கு மத்தியிலும் வாகனத்தைச் செலுத்துகின்றேன். எந்தவொரு உயிரினத்துக்கும் தன்னால் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியும், மனவுறுதியும் கொண்டிருக்க வேண்டும். மற்றும் அவர்களுக்கு வீதி ஒழுங்குகள், சட்டங்கள், மீறுவதால் ஏற்படும் பாதகங்கள் சம்பந்தமாகவும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும். இதன் காரணமாக வீதி விபத்துக்களையும், அதன்
பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ளலாம்.

நீண்டகாலமாக இவ்வாறான சமூக, உடலாரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்திவரும் ரைடர்ஸ்ஹப் சைக்கிளிங் கிளப் என்ற சைக்கிளோட்ட கழகம் வீதி விபத்துக்களைத் தவிர்ப்பது சம்பந்தமான ஒரு நீண்ட தூர விழிப்புணர்வு சைக்கிளோட்டத்தை ஏற்பாடு செய்து, உங்களிடம் வந்துள்ளது. நீங்களும் பயன்பெற்று, ஏனையவர்களையும் பயன்பெற வைத்து வீதி விபத்துக்கள், அதன் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.