மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இம் மாதம் (நவம்பர்) அதிகரித்து வரும் நிலை. பணிப்பாளர் த.வினோதன்

( வாஸ் கூஞ்ஞ) 03.11.2021

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் (நவம்பர்) கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை விகிதாசாரம் அதிகரித்து வருகின்றது. மன்னார் மக்களின் சுகாதார நடைமுறைகளில் தளர்வு ஏற்பட்டு வருவதுடன் பயணக்கட்டுப்பாடும் தளர்ந்துள்ளமையே காரணம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் புதன்கிழமை (03.11.2021) தனது பணிமணையில் நடாத்திய ஊடக சந்திப்பில் தொடர்ந்து தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது புதிதாக 22 பேர் கொவிற் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 05 பேர் பெரிய பண்டிவிரிச்சான் மாவட்ட வைத்திசாலையிலும் 07 பேர் நானாட்டான் மாவட்ட வைத்தியசாலையிலும். 04 நபர்கள் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் ஒருவர் கடற்படையினருக்கும் முசலி பகுதியில் 02 பேருக்கும் முருங்கன் ஆதார வைத்தியசாலை, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் பேசாலை மாவட்ட வைத்தியசாலையிலும் தலா ஒருவருக்கும் இவ் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் கடந்த ஒக்டோபர் மாதம் சராசரி ஒரு நாளைக்கு எட்டு அல்லது ஒன்பது கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில்

இந்த மாதம் (நவம்பர்) கடந்த மூன்று தினங்களில் சராசரி ஒரு நாளைக்கு 17 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட நிலையில் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

இதை நோக்கும்போது தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பயணத் தடை தளர்வு. ஏற்கனவே கொவிட் தொற்று நோய் காரணமாக மக்கள் இங்கு கடைப்பிடித்து வந்த சுகாதார நடைமுறைகளில் தற்பொழுது மக்கள் காட்டிவரும் அசிரத்தை காரணமாகவும் இப்பொழுது மீண்டும் இங்கு கொவிட் தொற்று தீவிரமாக பரவும் தன்மை தோன்றி வருவதையும் நோக்கக்கூடியதாக இருக்கின்றது. என தெரிவித்தார்.

ஆகவே இன்றைய சூழலை மன்னார் மக்கள் கவனத்துக்கு எடுத்து சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

அத்துடன் தீபாவளி இதைத் தொடர்ந்து வருகின்ற கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை காலங்களில் இங்குள்ள ஒவ்வொரு மக்களும் கொவிட் தொற்று தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என தொடந்து வலியுறுத்துகின்றோம்.

இவ் விடயத்தை ஒவ்வொருவரும் சிரமேற்கொண்டு சுகாதார நடைமுறையை பின்பற்றினால் மட்டுமே இவ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்பதையும் இங்கு வலியுறுத்தி நிற்கின்றோம்.

அத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 13 ந் திகதிக்குப்பின் மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் எவரும் மரணிக்கவில்லை மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 23 கொவிட் தொற்றாளர்களே மரணித்து உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் தடுப்பூசி வழங்களில் ஓரளவு முற்று பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் இருபது வயதுகளுக்கு மேற்பட்டவர்களில் 86 சத வீதத்தினர் முதலாவது தடுப்பூசியையும் இரண்டாவது தடுப்பூசியை 74 சத வீதத்தினரும் இதுவரை பெற்றுள்ளனர்.

இதுவரை பாடசாலைகளில் மொத்தமாக 4882 மாணவர்களுக்கு இவ் கொரோனா தொடர்பான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

அத்துடன் பாடசாலை செல்லும் வயதுடைய ஆனால் பாடசாலைகளுக்கு செல்லாத 531 பேருக்கும் இவ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

மேலும் நேற்றைய தினம் (02.11.2021) முதல் சுகாதார பணியாளர்கள் மற்றும்  பாதுகாப்பு படையினர் பொலிஸ் ஆகியோருக்கும் மூன்றாவது தடுப்பூசி வழங்கல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (02.11.2021 செவ்வாய் கிழமை) 111 பேருக்கு இவ் மூன்றாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இன்றையத் தினமும் இவ் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இவ்வாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தனது ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.