ஆலையடிவேம்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விழிப்பூட்டும் செயலமர்வு

வி.சுகிர்தகுமார்

  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுக்கும் சமுர்த்தி தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விழிப்பூட்டும் செயலமர்வு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் தலைமையக முகாமையாளர் என்.கிருபாரன் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் பொத்துவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி முகாமையாளர் எம்.ஏ.ஏ.நஜீம் வளவாளராக கலந்து கொண்டு பயிற்சி நெறியை நடாத்தி வைத்தார்.
இச்செயலமர்வில் சமுர்த்தி பயனாளிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவர்களிலிருந்து தொழில் முனைவோரை அடையாளம் காணுதல் அடையாளம் காணப்பட்டவர்களின் மனநிலையில் நேர்மறை சிந்தனையினை ஏற்படுத்தல் தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டன.
அத்தோடு அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தொழில் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனரா என தொடர் கண்காணிப்பை மேற்கொள்வதுடன் அவ்வப்போது அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி சமூகத்தில் வளமுள்ளவர்களாக மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ஆர். மதியழகன் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கே.அசோக்குமார் எஸ்.சுரேஸ்காந் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.