நாம் தீய்ந்து விட்டோமா?பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளவள வழிகாட்டல் விழிப்புணர்வு

வி.சுகிர்தகுமார்

  அரச உத்தியோகத்தர்களின் உளவளத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி அவர்களின் வினைத்திறனான சேவையினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பல்வேறு செயற்பாடுகளும் அரசாங்கத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளவள வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வொன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உளநலப்பிரிவின் வைத்தியர் சுமதி றெமன்ஸ் வளவாளராக கலந்து கொண்டார்.
நாம் தீய்ந்து விட்டோமா? எனும் தலைப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில்  வைத்தியர் சுமதி றெமன்சினால் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
வாழ்க்கையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அழுத்தங்கள் தகாத செயற்பாடுகள் இயற்கை அனர்த்தங்கள் கொரோனா பாதிப்பு போன்றன நம்மில் பலரை உளக்கோளாறுகளுக்கு உள்ளாக்குகின்றன.
இந்நிலையில் உளப்பிரச்சினை தொடர்பான அறிவூட்டல் சிறந்த முறையில் வழங்கப்படுவதுடன் உளவளத்துணையும் வழங்கப்படுவது அவசியமாகும். குறிப்பாக அரச உத்தியோகத்தர்களும் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து பாதிப்பினை எதிர்கொள்வதுடன் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
உடலியல் நோய் அறிகுறிகளைக் கண்டு அவற்றைக் குணப்படுத்தக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் உளவியல் நோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றபோதும் கொடுக்கப்படுவது அவசியமாகும். அவ்வாறு வழங்கப்படும்போது அவர்களை மன ஆழுத்தத்திலிருந்து காப்பாற்ற முடியும்.
அவ்வாறு நிகழும்போதே அரச உத்தியோகத்தர்களின் வினைத்திறனான சேவையினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஆகவே இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அரச உத்தியோகத்தர்களின் மனநிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் நடவடிக்கை மேற்கொண்ட பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவினருக்கு தனது பாராட்டினையும் வைத்தியர் சுமதி றெமன்ஸ் தெரிவித்துக்கொண்டார்.