தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை பி.கேதீஸ்

மஸ்கெலியா பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்துக்கெதிராக 1.11.2021 திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

செப்டம்பர் மாதம் 28 ம் திகதியிலிருந்து இன்றுவரை தொடர்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்டத்தில் தங்களது சம்பள பணத்தில் மாதாந்தம் தோட்ட நிர்வாகத்தால் அறவிட்டுவந்துள்ள பணத்தை உடனடியாக வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்ட நிர்வாகத்தால் வழமையாக அத்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தில் ஒருதொகை பணம் அறவிட்டு அதனை தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வழங்குவார்கள். அதன் அடிப்படையில் கூட்டுறவு பணமாக 8000 ரூபாவும் பிடித்து வைத்த பணமாக 12000 ரூபாவும் வழங்குவர். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள போதிலும் இதுவரை தோட்ட நிர்வாகம் அந்த பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக தோட்ட அதிகாரியிடம் தோட்ட தோழிலாளர்கள் அப்பணத்தை வழங்ககோரி கேட்டபோதிலும் அவர் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை வழங்குவதாக கூறினார் என போராட்டத்தில் கலந்துக்கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். தீபாவளிக்கு முதல் நாள் அப்பணத்தை வாங்கி பிள்ளைகளுக்கு எப்படி புத்தாடைகள் வாங்குவது தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவது தீபாவளியை எப்படி கொணட்டாடுவது என கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்ச்சியாக 34 நாட்களுக்கு மேல் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றோம். நாங்கள் வாய் விட்டு சொல்ல முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம். மிகவும் கஸ்டப்படுகின்றோம். இவ்வாறான நிலையில் எங்களிடம் தோடட் நிர்வாகத்தால் அறவிட்டு வைத்துள்ள பணத்தையே தரும்படி கேட்கின்றோம். அதனை தோட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க முன்வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் தோட்ட நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள 11 தொழிலாளர்களுக்கும் மறுபடியும் வேலை வழங்க வேண்டும்.

இத்தோட்டத்தில் வெளியாட்களுக்கு வேலை வழங்குவதை தோட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும், எங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை தொழிற்ச்சாலை முன்பாக அணிதிரண்ட தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கு, தொழிலாளர்களின் சம்பளத்தில் கூட்டுறவு சங்கத்தில் பிடித்து வைத்திருக்கும் பணத்தினை உடனடியாக வழங்கு, தொழிலாளர்கள் மீது வேலை பழுவை சுமத்தாதே,1000 ரூபா சம்பளத்தினை உறுதி செய்,தொழில் திணைக்களம் நீதியை வழங்கு, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே, ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, எங்களுக்கு நீதி வேண்டும்,எங்கள் பணத்தை கொள்ளை இடாதே எங்கள் பணம் வேண்டும், நாங்கள் என்ன உங்கள் அடிமையா?,அதிகாரத்தால் ஆடாதே எம்மை அடக்க எவனாலும் முடியாது நினைவிருக்கட்டும், தன்மானத்தை சீண்டினால் தரங்கெட்டு போவாய் சீண்டாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறே இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.