அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 14வது வருடாந்த மாநாடு

பி.முஹாஜிரீன்

தொழிற் சங்கங்கள் தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும்இ அதன் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 14வது வருடாந்த மாநாடும், பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (31) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

தபால் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றார்கள். இருந்தபோதிலும் தபால் திணைக்களத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை யாராலும் மறுக்க முடியாது.

தொழிற் சங்கங்கள் எப்போதும் முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால் தான் ஒரு வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியும் தொழிற் சங்கங்கள் வெறுமனே போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது. எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும்.

அந்த வகையில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு நான் பாராட்டுகின்றேன். அஞ்சல் திணைக்களத்திற்கு இத் தொழிற் சங்கம் ஒரு வழிகாட்டியாக செயற்படும் என்பதில் ஐயமில்லை.

தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு அதன் உறுப்பினர்களின் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகும். தொழிற்சங்கங்களினால் எடுக்கப்படும் முடிவுகள் வெளிப்படைத் தன்மையாக இருத்தல் வேண்டுமென்றார்.

ஓய்வு பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று, அம்பாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.ஆர். ஹேமந்த பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட நிருவாகச் செயலாளர் திருமதி வினோதினி கார்த்திகேசு, பிராந்திய நிருவாக உத்தியோகத்தர் கே. செந்தில்குமார், மட்டக்களப்பு அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.