மாமனார், மாமியாரை கோடாரியால் வெட்டிய மருமகன்; ஓட்டமாவடியில் கோரச் சம்பவம்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மாமனாரையும், மாமியாரையும் மருமகன் ஒருவர் கோடாரியால் வெட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பகுதியிலே இக் கோரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்திருந்த கணவன் ஒருவரே வீடு புகுந்து மனைவியின் தந்தைக்கும், தாய்க்கும் இவ்வாறு கோடரியால் வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மருமகனின் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய மாமனார் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மாமியார் தொடர்ந்தும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இக் கோரத் தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.