காரைமுனை குடியேற்றச் செயற்பாடு இனவாத முரண் அரசியலின் பாய்ச்சல். (ஞா.ஸ்ரீநேசன்)

(இ.சுதாகரன்) தற்போது மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் சிங்களக் குடியேற்றச் செயற்பாடு ஆரம்பித்துள்ளது. அதிலொன்றுதான் இரகசிய முறையில் முன்னெடுக்கப்பட இருந்த வாகரைப் செயலகப் பிரிவுக்குப்பட்ட காரமுனைக் குடியேற்றத் திட்டமாகும். காரைமுனை குடியேற்றச் செயற்பாடு இன முரண்பாடுகளை உருவாக்கும் இனவாத அரசியலின் பாய்ச்சலாகவே பார்க்கப்படுகிறது என கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

காரமுனை சிங்களக் குடியேற்றத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் பெரும்பான்மை இனத்தவர் என்ற வகையில் சிங்கள இனம் சார்பான விடயங்களைக் கச்சிதமாக கையாளஇவஅதற்கான அதிகாரப் பின்னணிகளை கிழக்கு மாகாண ஆளுனர் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாசி மாதத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துடன் இணைத்து வெளியில் வராதவாறு குடியேற்ற முன்னெடுப்புகள் இடம்பெற்றுள்ளன.

1983 காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்ததாகக் கூறி 200 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் காணியாணையாளரால்
முன்னெடுக்கப்பட்டபோது தமிழ்இ முஸ்லிம் மக்களின் எதிர்ப்பையடுத்து குடியேற வந்தவர்கள் அவ்விடத்தினை விட்டு விரைவாக வெளியேறினர். அதாவது மட்டக்களப்பு வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் போலியான பல ஆவணங்களுடன் காரைமுனையில் வாழ்ந்தவர்கள் போன்று குடியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலை கைவிடப்பட்டது.

கிழக்கின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமாக சிங்கள பெளத்த மயமாக்கல் நிலைநிறுத்தப்படுகின்றன. மாதவனை, மயிலத்தமடு, கெவுளியாமடு, காரைமுனை, வடமுனை, நெளுக்கல் மலை என்ற வகையில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களைச் செய்கின்ற செயற்பாடுகள் மட்டக்களப்பில் அரங்கேறுகின்றன.

பெளத்த சிங்களத் தலைவர்கள் பல்லின மக்களை சிந்திக்காமல் சிங்கள மக்களை மாத்திரம் கவனத்திற்கொண்டு சட்ட திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகிறார்கள். குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் வடக்கு – கிழக்கில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலமாக சிங்கள சமூகத்தவர்களின் அரசியலாதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள்.

கடந்த ஆட்சிக்காலத்தில் தொட்டது பட்டது எல்லாவற்றுக்கும் ஆர்ப்பாட்டம் என்று மக்களை ஏமாற்றிய பெயரளிகள் இப்போது ஆளுங்கட்சிக்குள் வாயடைத்து மௌனிகளாகவும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் அரசாங்கத்தின் ஏவலாளிகளாகவும் மாறியுள்ளனர்.

மட்டக்களப்புக் காணிகள், மண் வளம் அபகரிக்கப்படுகின்றபோது தம்பிகள், எம்பிகள் தலைமறைவாகி விடுகிறார்கள். அதன் பின்னர் தம்மைத்தாமே கிழக்கு மண்ணின் இரட்சகர்கள் என்று பிரகடனம் செய்கிறார்கள்.

மறைமுகமாக அரசாங்கத்தின் ஏவலாளிகள் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள். அடிப்படைவாத அதிகார வர்க்கத்துடன் இணைந்த எந்தத் தமிழ்ப்பிரதிநிதியும் தமிழ்ச் சமூகங்களைப் பாதுகாத்ததாக வரலாறு இல்லை. அரசாங்கத்தின் எடுப்பார் கைப்பிள்ளைகள் பதவி பெற்று பணம் உழைத்துக்கொண்டு தமிழ் இன மக்களைப் பலிக்கடா ஆக்கியுள்ளனர் என்றார்.