கண்ணகிகிராமத்தில் இராணுவத்தின் உதவியுடன் பாரிய அளவில் சேதனப்பசளை தயாரிப்பது தொடர்பிலான ஆலோசனை கூட்டம்.

(வி.சுகிர்தகுமார்)ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் இராணுவத்தின் உதவியுடன் பாரிய அளவில் சேதனப்பசளை தயாரிப்பது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் கண்ணகி வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் கமல் நெத்மினி இராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச சபை செயலாளர் உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் சேதனப்பசளை தயாரிக்கும் இடமாக கடந்த காலத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையமாக இயங்கிய வந்து கைவிடப்பட்ட பிரதேசத்தை பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது எனவும் முடிவு காணப்பட்டது. இந்நிலையில் முறையற்ற பராமரிப்பு காரணமாக மக்களின் எதிர்ப்பின் மத்தியில் கைவிடப்பட்ட குறித்த இடத்தை உரிய முறையின் கீழ் பயன்படுத்துவதன் நன்மைகள் பற்றி பிரதேச செயலாளர் எடுத்துரைத்தார். அத்தோடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எழும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் விளக்கினார்.

இதனால் பிரதேச சபை மாதாந்தம் இழந்து வரும் பெரும் தொகைப்பணத்தை ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டது.

மேலும் பிரதேச சபையால் கழிவுப்பொருட்களை சேகரித்து குறித்த இடத்திற்கு எடுத்து செல்லும் பணி மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் இதன் பின்னரான அனைத்து செயற்பாடுகளையும் இராணுவத்தினரே பொறுப்பேற்று செயற்படுத்துவர் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதனால் சூழலுக்கோ அல்லது அங்கு வாழும் மக்களுக்கோ எதுவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டது. இதனை பிரதேச செயலகம் பிரதேச சபை இராணுவம் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டது.

மேலும் இங்கு தயாரிக்கப்படும் சேதனப்பசளை நமது பிரதேச விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குறித்த திட்டத்தின் ஊடாக உருவாகும் வேலைவாய்ப்புக்கள் யாவும் கண்ணகிகிராம மக்களுகே முன்னுரிமை அளித்து வழங்கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கப்பட்;டது.

இதேநேரம் பல அதிகாரிகளும் குறித்த திட்டம் தொடர்பில் விளக்கினர். இந்நிலையில் பொதுமக்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கும் கோரிக்கைக்கும் அமைய இன்னுமொரு தினத்தில் மக்களை அழைத்து விளக்கமளிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.