அமைச்சர் டக்ளஸ் அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு.

(நூருள் ஹுதா உமர்) நீண்டகாலமாக அம்பாறையில் நிலவி வரும் மீன்பிடிசார் பிரச்சினைகள், மீனவர்களின் தேவைகள், ஒலுவில் துறைமுக விவகாரம், மீன் திருட்டு விடயம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எடுத்துரைத்து விளக்கும் மீனவர்கள் சந்திப்பு இன்று (27) காலை மீன்பிடித் திணைக்கள மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட உதவிப்பணிப்பாளர் நடராஜா ஸ்ரீரஞ்சன்  தலைமையில் நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்ட மீன்பிடி அமைப்புக்கள், மீன்பிடி சம்மேளனம், மீன்பிடி சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க கோரி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது மீனவர்கள் படும் கஷ்டங்கள், தொழிலை விட்டு வெளியேரும் நிலை, சட்டவிரோத மீன்பிடி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த மீனவர்களுக்கும் அமைச்சருக்கிடையிலான சந்திப்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கடற்தொழில் திணைக்கள பயிற்சி மற்றும் விசாரணைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஜி. என். ஜெயக்கொடி, கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரியும், ஒலுவில் துறைமுக நிலைய பொறுப்பதிகாரியுமான அசம்போட்கே இரங்க உட்பட கடற்தொழில் திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.