சமூக ஒற்றுமையை சீரழிக்க முனையும் எந்த சக்திக்கும் முஸ்லிம் தலைமைத்துவங்கள் இடமளிக்காது : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி

(மாளிகைக்காடு- நூருல் ஹுதா உமர், கல்முனை- எம்.என்.எம். அப்ராஸ்) கல்முனை கிளு- கிளுப்பு சமூக சேவைகள் அமைப்பின் ஒன்றுகூடலும் புதிய மேலங்கி அறிமுக நிகழ்வும் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம். ஆஷிரின் தலைமையில் கல்முனை தனியார் மண்டபத்தில் நேற்று (26) இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், இலங்கையில் வாழும் முஸ்லிங்கள் எமது நாட்டின் கௌரவத்தை காத்து நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான அர்ப்பணிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வந்துள்ளனர். வெள்ளையர்களின் காலம் முதல் இலங்கையர்கள் தேசபக்தி மிக்கவர்களாக இருந்துள்ளதுடன் எந்த பிரதேசத்தில் வாழ்ந்தாலும் ஏனையோர்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இந்த ஒற்றுமையை சீரழித்து இனமுரண்பாடுகளை உருவாக்க பல்வேறு தளங்களிலும் பல நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேறி வருகிறது. அவ்வகையான திட்டங்களை முறியடிக்க மக்கள் நம்பியுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்களான நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கிறோம்.

கடந்த காலங்களில் ஜனாஸா நல்லடக்க விடயங்களிலும் எங்களை நாங்கள் பலிகொடுத்து பல்வேறு தளங்களிலும் இயங்கி வெற்றி கண்டோம். அந்த சூழ்நிலையில் எங்களுக்கு உதவியது மட்டுமின்றி ஆலோசனைகளும் வழங்கியவர்கள் உள்ளார்கள். சமூக தேவைகளை புரிந்துகொண்டு களத்தில் இறங்கி சமூக சேவை செய்துவரும் இந்த அமைப்பின் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதுடன் எதிர்காலத்தில் என்னால் முடியுமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் இணைப்பு செயலாளர்களான நௌபர் பாபா, சப்ராஸ் நிலாம், கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் முஹம்மத் ஜெய்சான், கல்முனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் முஹம்மத் றப்சான், சிலோன் மீடியா போரத்தின் நிர்வாக உறுப்பினர்கள், அமைப்பின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கொண்டனர்.