மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி  ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

பாடசாலை மாணவர்களுக்கான பைஸர்  தடுப்பூசி  ஏற்றும்  நடவடிக்கை இன்று முதல்  எதிர்வரும் 24 ஆம் திகதி வரை  மட்டக்களப்பு சுகாதார  வைத்திய அதிகாரி  பிரிவுக்குட்பட்ட 12 பாடசாலைகளில்   முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய  அதிகாரி  வைத்தியர் கே.கிரிசுதன்   தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ்  தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ்  பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை  கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து  முன்னெடுத்து வருகின்றது .
அந்தவகையில் 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பிறந்த மாணவர்கள், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை  எழுதிய மாணவர்கள்  மற்றும் உயர்தர  பரீட்சைக்கு தோற்றவுள்ள   மாணவர்களுக்குமாக முதல் கட்ட பைஸர்  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் மட்டக்களப்பு கல்வி வலயத்தில்  ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக  இன்றையதினம் (21) மட்டக்களப்பு  மகாஜன கல்லூரி மற்றும் அமிர்தகழி  ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களுக்கான   தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று மகாஜன கல்லூரியிலும்,
விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் கல்லடி விபுலானந்தா வித்தியாலயம் ஆகியவற்றின்  மாணவர்களுக்கான  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கல்லடி உப்போடை விவேகானந்தா வித்தியாலத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.