திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ வயல் பகுதியில் மரமொன்று சிறுவன் மீது விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவ சிறுவன் ஹொரவ்பொத்தான-துடுவெவ பகுதியைச் சேர்ந்த அதே பிரதேசத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் சுந்தர சேனகே சம்பிக்க சுந்தர சேன் (14வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது மொரவெவ பிரதேசத்திலுள்ள வயலில் உழவு அடித்துக் கொண்டிருந்தபோது சாரதி மரத்துக்கு அருகே உழவு இயந்திரத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் வயல் உரிமையாளர் மரத்திற்கு தீ மூட்டிய நிலையில் மரம் சிறிது சிறிதாக மரத்துக்கு அடியில் தீ பற்றியதாகவும் இதனை அவதானிக்காத உழவு இயந்திரத்தின் சாரதி உழவு இயந்திரத்தை மரத்துக்கு அருகே நிறுத்தி விட்டு சென்றதாகவும் இதனை அடுத்து சிறுவன் உழவு இயந்திரத்தில் ஏறி இருந்ததாகவும் அதேநேரம் மரம் உழவு இயந்திரத்துக்கு மேலால் வீழ்ந்ததாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிசார் தெரிவித்தனர்.