மட்டக்களப்பில் மூன்று குளங்களை  புனரமைத்துக்கொடுக்க அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக திட்டம்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் வாகரை பிரதேசத்திலுள்ள 3 குளங்களை புனரமைப்பதற்கு அரசுசார்பற்ற நிறுவனமான கொகோகோலா பவுன்டேசன்  200000 அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியை செலவுசெய்ய உள்ளமை தொடர்பான அறிமுக நிகழ்வு  மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த குளங்களின் புனரமைப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

குறித்த புனரமைப்பு திட்டங்கள் அமுல்படுத்தவுள்ள கால எல்லை தொடர்பாகவும் வாகரை பிரதேசத்தில் புனரமைக்கப்படவுள்ள பனிச்சங்கேனி, திக்கானை மற்றும் தாமரைக்குளம் போன்ற மூன்று குளங்களையும் அத்தோடு அக்குளங்களை அண்டிய மக்களுடைய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களையும் சிறியளவு மீன் வளர்ப்புக்கு அந்த நிதியினை பயன்படுத்துவது தொடர்பாகவும் அதனை ஆரம்பிப்பதற்கு திணைக்களங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் மக்களுக்கு உதவி செய்ய வந்த நிறுவனத்திற்கு இதன்போது நன்றியும் தெரிவிக்கப்பட்டது.