பதவியாசை இல்லை என்பதை சமூகத்திற்கு நிரூபிக்கவே ஹரீஸ் பதவி துறப்பை முன்மொழிந்திருந்தார்

மாளிகைக்காடு நிருபர்

தேசிய காங்கிரசின் கல்முனை அமைப்பாளர் சகோதரர் றிசாத் செரீப் அவர்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளாமல்  கருத்து வெளியிட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக அமைந்துள்ளது. தே.கா. கல்முனை அமைப்பாளர் றிசாத் செரீப் அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கூறியிருப்பது தான் பின்பற்றும் அரசியல் வழிமுறைகளையும், தான் அரசுடன் வைத்திருக்கும் உறவுமுறை பிழையானது என்றும் அரசை விட்டு வெளியேறி எதிராணியிலிருந்து அரசியல் செய்ய வேண்டும் என்று கூறும் தனது கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் விமர்சனம் செய்கின்றவர்களும் கூறிக்கொள்ளும் விடயமாக அமைந்துள்ளது   என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், அரசுடனான உறவை முறித்துக்கொண்டு எதிரணி அரசியல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக அமைந்துள்ளது.  கல்முனை விடயம் தொடர்பிலும் முஸ்லிங்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பிலும் எதிரணியிலிருந்து சாதிக்க முடியும் எனும் தீர்வுத்திட்டத்தை முன்வைக்குமாறு அவர்களை நோக்கி தனது அறிவிப்பை வெளியிட்டிருந்தார். எனவே அவர்கள் கூறுவது போன்று எதிரணியிலிருந்து சாதித்து காட்டமுடியுமா என்பதே இங்கிருக்கும் மிகப்பெரிய கேள்வி. இதனையெல்லாம் புரிந்துகொள்ளாமல் ஆளும்தரப்பு கட்சியொன்றின் பிரதிநிதியான நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராகும் கனவுடன் கண்களை மூடிக்கொண்டு அறிக்கைகளை விட்டு பதவி மோகம் பிடித்த ஒருவராக தன்னை அடையாளப்பத்திக் கொண்டுள்ளீர்கள்

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வாதம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிங்கள் பெரும்பான்மை இன மக்களுடன் முரண்படக்கூடாது என்பதே. அரசுடன் பேசியே எமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெறமுடியும். என்ற அரசியல் வழிமுறையும் சாணக்கியன் போன்றோர்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் குளறுபடிகளை உண்டாக்கி 56 காலப்பகுதியில் தமிழர் தரப்பு செய்தது போன்று எதிரணி அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சிகளை செய்கிறார். அவருக்கு பின்னால் சில முஸ்லிம் இளைஞர்கள் அள்ளுண்டு போகிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் உட்பட முஸ்லிம் எம்.பிக்கள் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்று ஸ்ரீ.ல.மு.கா. உயர்பீட உறுப்பினர்களும், சில விபரமறியா இளைஞர்களும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் அவர்களை நோக்கியே பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். எம். ஹரீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் இந்திய படை வெளியேற முன்னர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்  யார் என்று கேட்டதை போன்ற சம்பமே இது. சகோதரர் றிசாத் ஷரீப் அவர்களே உங்களால் முடிந்தால் எதிரணியில் அமர்ந்து கொண்டு கல்முனை விவகாரம் தொடர்பில் எவ்வகையான தீர்வை முன்வைக்கலாம் எனும் தீர்வுத்திட்டத்தை பகிரங்கப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்வதுடன் உங்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் சகோதரர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை கல்முனை ஜும்மாப் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து கல்முனை மக்களின் தாலவட்டுவான் சந்திவரையிலான பிரதேச செயலக எல்லை தொடர்பிலான தீர்வை முன்வைக்க முடியுமா என்று கேட்கிறேன்.

உங்களை போன்ற பலரினதும் சவால்களுக்கு மத்தியில் கல்முனை விவகாரம் அடங்களாக நாட்டு முஸ்லிங்களின் பிரச்சினைகளின் தீர்வுக்காக போராடும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை விமர்சிக்கின்ற நீங்கள் பொதுமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பொதுவெளியில் முன்வைத்தால் தனக்கு பதவியாசை இல்லை என்பதை சமூகத்திற்கு நிரூபிக்கவே அந்த அறிவிப்பை முன்மொழிந்திருந்தார். கடந்த காலங்களிலும் தனது இராஜாங்க அமைச்சர் பதவியை தூக்கி வீசிய அவர் இறுதிவரை அந்தப்பதவியை பெறவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய வரலாறாகும். அவர் பதவியை இராஜினாமா செய்தால் அவரது இடத்திற்கு நியமனமாகப்போவதும் முஸ்லிம் சகோதரனே என்பதை புரிந்து கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்