பி. முஹாஜிரீன்
பாலமுனையில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஒயில் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு (12) பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டு தொழிற்சாலை வளாகம் முழுவதும் எரிந்து பெரும் சேதத்திற்கு உள்ளானது.
வானளாவ உயர்ந்து பெரும் தீச் சுவாலைகளுடன் மேலெழுந்து எரிந்துகொண்டிருந்த இப்பாரிய தீ அனர்த்தம் நள்ளிரவு ஒரு மணி தாண்டியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
தீ அனர்த்தம் ஏற்பட்ட இடத்தைச் சூழ பெரும் புகை மண்டலம் காட்சியளித்ததுடன், தொழிற்சாலையை சூழ்ந்த பிரதேசம் அபாய வலயமாகவே தென்பட்டது.
குறித்த இடத்திற்கு அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை மாநகரசபை, அம்பாறை நகரசபை ஆகியவற்றின் தீயணைப்பு படைப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீயணைப்புப் பணியில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.
குறித்த தீ அனர்த்தத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தொடர்ச்சியாக தீ எரிந்து கொண்டிருப்பதனால் ஏற்பட்டுள்ள சேதத்தையும் கணிப்பிட முடியாது உள்ளது. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
டயர்களை உருக்கி ஒயில் உற்பத்தி செய்யும் இத்தொழிற்சாலையில் டயர்கள் குவிக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பெருக்கு ஏற்பட்டு விரைவாக பரவியதுடன், தொழிற்சாலையின் இயந்திர பகுதிக்கும் தீ பரவியதாக இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
டயர்களில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனாலும், இயந்திரப் பகுதியில் பரவிய தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிசார் தீ அனர்த்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. தீ அனர்த்தத்திற்கான காரணம் மற்றும் தீயினால் ஏற்பட்ட சேதம் என்பவை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.