இன்னொருவரின் பரம்பரை வீட்டையே தங்கள் வீடு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு மண் அனுமதிப் பத்திரங்களின் பெயர்ளை மாற்றுவது பெரிய விடயமாக இருக்குமா? என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நரிப்புல்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நல்லாட்சி காலப்பகுதிகளில் எமது பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருந்தோம். உண்மையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் கூட ஐ புரஜெக்ட் என்று சொல்லப்படும் ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேடமான வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு கிழக்கிலே இருக்கும் 80 வீதமான பாதைகளைப் புனரமைப்பதற்கான நிதி 2016ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அது பத்து வருடத்திற்கான திட்டம். அந்த வேலைத்திட்ங்கள் தான் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எமது பிரதேசம் மற்றும் சமூகத்தைப் பொருத்தவரையில் அரசியல் ரீதியான சில விழிப்புணர்வுகள் இருக்க வேண்டும். எங்களின் எதிர்காலம் வெறுமனே பாதைகளோ, ஆலயங்களோ அல்ல. இந்த நாட்டிலே தமிழர்கள் நிம்மதியாக வாழக் கூடிய ஒரு சூழல் அமைய வேண்டும்.
எமது போராட்டங்களில் அத்தனை உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டதற்கான காரணம் வீதி புனரமைப்பதற்கோ கட்டிங்களுக்காகவோ அல்ல. எமது இனத்தின் விடுதலைக்காக. அப்போது எமது போராட்டம் ஆயுத ரீதியில் இருந்தது. தற்போது நாங்கள் அரசியல் ரீதியாக அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறான எங்கள் அரசியல் உரிமை பற்றிப் பேசுபவர்களைக் கூட இந்த அரசாங்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.
எமது மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 8க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வரை இன்று பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதே தவிர தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் மௌனிக்கப்படவில்லை. எமது அரசியல் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராட வேண்டும். இல்லாவிடின் வீதிகளைப் புனரமைத்து. பாடசாலைகளைக் கட்டி வேறு சமூகத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டு நாங்கள் அவர்களுக்கு கீழ் அடிமையாக வாழ்வதற்குத் தயாராக வேண்டும்.
எமது போராட்டத்தில் எவரும் தங்களின் தனிப்பட்ட இலாபங்களுக்காகப் போராடியவர்கள் அல்ல. தங்களின் இனத்திற்காகப் போராடியவர்கள். அதனை ஒரு குற்றமாகக் கருத முடியாது.
அரசியல் ரீதியாக எமது இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தை நாங்கள் எப்போதும் விடப்போவதில்லை. அதனைத் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது. அவ்வாறிருக்க எங்களுக்கு உரிமை தேவையில்லை எங்களுக்கு கொங்கிறீற்று வீதிதான் தேவை, எங்கள் அரசியற் கைதிகளை செருப்பை நக்கும்படி சொன்னாலும் பரவாயில்லை, அவர்கள் பக்கத்திலேயே நில்லுங்கள் என்று மக்கள் சொல்லுவார்கள் என்றால் அவ்வாறான அரசியல் எங்களுக்கு வேண்டாம்.
வீதிகள் புனரமைப்பதாக இருந்தாலும், எந்த அபிவிருத்தியாக இருந்தாலும் அது அரசாங்கத்தின் நிதி. இந்த நாட்டின் பிரஜைகளுக்கு அது வழங்கப்பட்டே ஆக வேண்டும்.
இன்று சஜித் பிறேமதாச அவர்கள் ஆரம்பித்த வீடடுத் திட்டங்கள் முடியாமல் இருக்கின்றது. அந்த வீட்டுத் திட்டத்தை முடித்துத் தாருங்கள் என்றால் அதற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் இராஜாங்க அமைச்சர் நேரடியாகவே சொன்னார் இதனை முடித்துத் தர முடியாது என்று.
இவ்வாறிருக்க மட்டக்களப்பு மக்கள் அவிருத்திக்காக இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்திருக்கின்றார்கள். வரலாற்றில் முதற் தடவையாக .இது மக்களால் இடம்பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியையும் மக்களே கேட்க வேண்டும்.
வேலை வாய்ப்புத் தருகின்றோம் என்றார்கள். எமது கிராமங்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கின்றது. கடந்த வருடம் அரசாங்கத்தினால் 33000 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதில் தமிழர்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்புகள் ஆயிரம் மாத்திரமே. தமிழர்களின் விகிதாசார அடிப்படையில் பார்த்தால் சுமார் நான்காயிரம் பேருக்காவது வேலை கிடைத்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.
குறைந்தபட்சம் சஜித் பிறேமதாச கொண்டு வந்த வீட்டுத் திட்டங்களையாவது முடிக்க வேண்டாமா? ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்களாகின்றது இதுவரையில் சஜித் பிறேமதாசாவினால் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் நிறைவு செய்து தந்த வீடுகள் ஒன்றையாவது சொல்ல முடியுமா? ஆனால் புதிதாக ஒரு கிராமத்துக்கு ஒரு வீட்டுத் திட்டம் என்று தாங்கள் விரும்பியவர்களுக்கு ஒரு வீட்டினைக் கட்டிக் கொடுக்கின்றனர். மக்களுக்கு வழங்கப்படுகின்ற விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், முடிக்கப்படாமல் இருக்கும் வீட்டுத் திட்டங்களை முடித்து மக்களுக்கு கொடுத்திருக்கலாம் தானெ. இதைச் செய்ய முடியாவிட்டால் பிறகு இந்த மாவட்டத்தில் அபிவிருத்திக்கு இரண்டு பேர் எதற்கு?
இதில் நான் மக்களைக் குறை சொல்ல மாட்டேன். ஏனெனில் வேலைவாய்ப்பு வீதி, வீடு என்று மக்களுக்கு ஒரு மாயை ஒன்று உருவாக்கப்பட்டது.
அரசாங்கத்தைச் சேர்ந்துள்ள இந்த மாவட்டத்தின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு விடயங்களைச் சரியாகச் செய்கின்றார்கள். தங்களினதும், தங்களைச் சார்ந்தவர்களினதும் வருமானங்களை அதிகரித்துச் செல்கின்றார்கள். மண் மாபியாவை இயக்குவதைத் தவிர அவர்கள் மாவட்டத்திற்குச் செய்த வேலை என்ன? அவர்கள் ஊடக சந்திப்புகளை வைத்து தங்களுக்கும் மண் அனுமதிப்பத்திரங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லுகின்றார்கள். இன்னொருவரின் பரம்பரை வீட்டையே தங்கள் வீடு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு மண் அனுமதிப் பத்திரங்களின் பெயர்ளை மாற்றுவது பெரிய விடயமாக இருக்குமா?
மண் வளம் என்பது எப்போதும் அப்படியே இருப்பதல்ல. இவர்கள் அதனை அளவுக்கு மீறி எடுக்க எடுக்க இந்த மண் வியாபாரம் தொடர்ச்சியாக நடக்கப் போவதும் இல்லை. படிக்கும் சிறுவர்களை இந்த மண் அகழ்வு வேலைகளுக்கு எடுத்து, அவர்களுக்கு கையில் காசைக் கொடுத்து அவர்களை போதைக்கு அடிமையாக்குகின்றார்கள். இந்த மண் அகழ்வு தொழில் ஒரு குறிப்பிட்ட காலம் நடக்கும் அதன் பின்னர் குடிப்பதற்கு நீரும் இல்லை, கையில் காசும் இல்லை, பழகிய போதைப் பழக்கத்தைக் கைவிடவும் தெரியாது, பாடசாலை கல்வியும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை, வீடும் இல்லை. ஆனால் இந்த மண் மாபியாவை இயக்கும் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் வருமானம் வரும்.
மண் அனுமதிப்பத்திர பட்டியலை வெளியிட்டால் அவர்கள் ஓடி ஒழிப்பதற்குக் கூட இடமில்லாமல் போகும். கோடிக்கணக்கான பணம் இதில் புலங்குகின்றது. இது எமது மாவட்ட மக்களின் வளங்கள். இந்தவளங்களைத் தொடர்ந்தும் அழிக்க விடக் கூடாது. எமது வளங்கள் அழிந்தாலும் பரவாயில்லை எமது அரசியல் உரிமையையாவது பாதுகாப்பவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர்கள் எமது உரிமையைப் பாதுகாப்பவர்களாகவும் இல்லை.
ஏனைய மாவட்டத்தவர்களால் இங்கு காணி பறிபோய்க் கொண்டிருக்கின்றது. இதைத்தான் இந்த அரசாங்கம் செய்கின்றது. இதனை யார் தடுக்க வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். எம்மால் முடிந்தவகையில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் அபிவிருத்திக்குழுத் தலைமை என்னும் அதிகாரமுள்ள பதவியை வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இதனைத் தடுக்க முடியாவிட்டால் இவர்கள் எதற்கு.