நிந்தவூர் பிரதேசத்தில் தேனீர் கடை காட்டு யானையினால் சேதம்.

 எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட வீரக்காடு போட்லந்து சாலையில் அமைந்திருந்த தேனீர் கடை நேற்று முன்தினம் (9) இரவு கூட்டமாக வந்த காட்டு யானைகளின்  தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது..
சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பகுதிகளிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனிநபர் சொத்துக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதோடு  கிராமவாசிகள் யானைகளின் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியும் உள்ளது.
தற்போதுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு காட்டு யானைகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாது குறித்து விவசாயிகள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் தற்போது அடிக்கடி மழை பெய்வதால் விவசாயிகள் பெரும்போக வேளாண்மை செய்கைக்காக வயலை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான காட்டு யானைகளின் அட்டகாசம் இப்பிரதேச விவசாயிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

வயலில் வேலை செய்யும் விவசாயிகள் ஓய்விற்காக ஒதுங்கும் பறன்களையும் நிழல்தரும் மரங்களையும் சேதப்படுத்திவரும் இக்காட்டு யானைகள் தேனீர் கடையை உடைத்து அங்கிருந்த உடமைகளுக்கு பலத்த சேதத்தையும் விளைவித்துள்ளது.