பிந்திய பதிப்பு இராகலை தீ விபத்து

(க.கிஷாந்தன்)

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால்  அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று நேற்று (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது.

இந்த  திடீர் தீ விபத்து சம்பவத்தில்  இவ் வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் சம்பவத்தை கேள்வியுற்ற  வீட்டில் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து கூச்சலிட்டு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

இதன் போது வீட்டின் சுவருகளை உடைத்து எரிந்த நிலையிலான சடலத்தை கண்டுள்ளனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவயது சிறுவனான மோகன்தாஸ் ஹெரோஷனுக்கு நேற்று (07)  இரவு முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரிழப்பு சம்பவத்தில் இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (13), முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய தந்தையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து  இன்று (08.10.2021) காலை 11.46 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குனதாச மரண விசாரணையை முன்னெடுத்தார்.

இதன்போது சம்பவத்தில் உயிர் தப்பிய மகன் தங்கையா இரவீந்திரன் (வயது 30) சடலங்களை அடையாளம் காண்பித்தார்.

பின் சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின் சடலங்களை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

இதன் பிரகாரம் பகல் 1.23 மணியளவில் சட்ட வைத்தியர் பி.ராஜகுரு வருகைதந்து  விசாரணையை மேற்கொண்டார்.

அதன்பின் பகல் 2.05 மணியளவில் சடலங்கள் லொரி ஒன்றின் மூலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார்,  நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முழுமையான வீடியோ

HomePage