மண் அகழ்விற்கு இடமளிக்கமாட்டோம். மட்டக்களப்பில் பொங்கியெழுந்த விவசாயிகள்.

க.ருத்திரன்.
 மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பூலாக்காடு, பொண்டுகள்சேனை கிராமங்களில் மண் அகழ்விற்கான புதிதாக அனுமதி பெற்றுக் கொள்ளும் முகமாக இடங்களை பார்வையிடுவதற்காக இன்று செவ்வாய் கிழமை (5.10.2021) கள ஆய்விற்கு வருகை தந்த அரச அதிகாரிகள் மற்றும்  வெளிமாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுடன் விவசாயிகள் மண் அகழ்விற்கு இடமளிக்கமாட்டோம் என்று கூறி களோபரத்தில் ஈடுபட்டனர்.

இன்று செவ்வாய் கிழமை காலை வாகநேரி வகிளாவெளிச் சந்தியில் கூடிய விவசாயிகள் வாகனங்களில் வந்த அதிகாரிகளை குறித்த கிராமங்களுக்குள் உட்செல்ல விடாமல் வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து குறித்த இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினார்கள்.
மண் அகழ்விற்கான  அனுமதி பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் தொடர்பாக பரிசீலனை செய்து பொருத்தமான இடங்களை பார்வையிட வேண்டிய கடமை பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக வருகை தந்த அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.
 இதன்போது மண் அகழ்வினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சட்டவிரோத மண் அகழ்வினால் நீர் வடிந்தோடும் இடங்கள் வயல் வெளிகள் வீதிகள் சேதமடைதல்,காட்டு மரங்கள் விழுதல்  வெள்ளம் ஏற்படுதல் தொடர்பான பல்வேறு விடயங்களை  முன்வைத்ததுடன் பிரதேசத்தில் தற்போது இது தொடர்பாக இடம்பெற்றுள்ள குறித்த சம்பவங்களை முதலில் பார்வையிடுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.இதன்போது வாகநேரி நிர்பாச திட்டத்தின் விவசாயம் செய்யும் பட்டியடி வெளி,வாகுளாவெள,ஆணமடங்கி,தவணை,பிரம்படித் தீவு,நுறு ஏக்கர்,பள்ளிமடு,போன்ற வயல் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் சிலவற்றை அதிகாரிகள பார்வையிட்டனர்.மேற்படி கண்டங்களைச் சேர்ந்த பதினையாயிரம் ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் மண் அகழ்வினால் பாதிக்கபடுவதாகவும் அதனை தடுத்து தருமாறு விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். சம்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த மண் அகழ்விற்காக அடையாளப்படுத்திய இடங்கள் நீர்பாசன திட்டத்திற்குள் வருவதனால் பொருத்தமற்ற இடமாக காணப்படுவதனால்  நீர்பாசன அதிகாரிகள்  அறிக்கைகளை  தங்கள் அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்பார்கள் என பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு கருத்து  தெரிவித்தார்.
மேற் குறித்த பிரதேசத்தில் 2 விண்ணப்பங்கள் புதிதாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு,மட்டக்களப்பு நீர்பாசன பணிப்பாளப்பளர் எஸ். நாகரெத்தினம்.மட்டக்களப்பு புவிசரிதவியல் திணைக்கள உத்தியோகஸ்த்தர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்