இவர்கள் நினைக்கின்ற, எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய முடியாது.ஞா.ஸ்ரீநேசன்

அரசியற் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சரின் வருகை தொடர்பான விடயத்திற்கே தலைமையிடம் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை என்றால். இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எதனைப் பேசிப் பெற்றுத் தரப் போகின்றார்கள். அவர்கள் நினைக்கின்ற அரசியலைத் தான் இவர்கள் செய்ய முடியுமே ஒழிய இவர்கள் நினைக்கின்ற, எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சமகால நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிகக்கையில்,

லொஹான் ரத்வத்த அவர்கள் அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்றார் என்றும் தமிழ்க்கைதிகளை மண்டியிடச் செய்தார் என்றும், பாதணியை நக்கும்படி சொன்னார் என்றும் சொல்லப்பட்டது. அவ்வாறான ஒருவர் மட்டக்களப்பிற்கு வந்திருக்கின்றார். அவர் வரவேற்கப்பட்டாரா? இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், அவர் வருகை தந்து கலந்துகொண்ட கூட்டத்தில் அவருடன் இணைந்து யார் யார் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதையே பார்க்க வேண்டும்.

இவர்கள் உண்மையில் ஒழுங்காகத் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்பவர்களாக இருந்திருந்தால் எமது மக்களின் தற்போதைய நிலை அறிந்து அவரை வரவேண்டாம், தமிழ் மக்கள் கடும் எதிர்ப்போடு இருக்கின்றார்கள் என்று அவரின் வருகையைத் தடுத்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு முடிவைக் கட்சித் தலைமை எடுத்திருந்தால் அதனை மறுத்திருக்க வேண்டும்.

அதை விடுத்து, அரசாங்கக் கட்சி அனுப்பியது, தலைமை அனுப்பியது என்றால் குறைந்த பட்சம் அவ்வாறானவர் வருகை தந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமலாவது இருந்திருக்க வேண்டும். இதில் எதுவுமே செய்யவில்லை. இது ஒரு சாதாரண விடயம். இந்த விடயத்திற்கே தலைமையிடம் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை என்றால். இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எதனைப் பேசிப் பெற்றுத் தரப் போகின்றார்கள்.

அரச தரப்பில் இருப்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நினைக்கின்ற அரசியலைத் தான் இவர்கள் செய்ய முடியுமே ஒழிய இவர்கள் நினைக்கின்ற, எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய முடியாது. எனவே மக்களை இன்னும் இன்னும் பேய்க்காட்ட வேண்டாம் என்று தெரிவித்தார்.