யானை – மனித மோதலுக்கு விரைவில் தீர்வு : இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்க உடனடி நடவடிக்கை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, யானை – மனித மோதலை தவிர்க்க பொருத்தமான நடவடிக்கைகள் நாளை முதல் எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

இதன்படி,  அனைத்து மின்சார யானை வேலிகளிலும் இரவு நேர ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மின்சார யானை வேலியின் 01 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 4 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

எதிர்காலத்தில் இதற்கென 5000 புதிய பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.