சமுர்த்தி லொத்தர் நிதி மூலமாக நிர்மானிக்கப்பட்ட வீடு திறந்து வைப்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி பயனாளி ஒருவருக்கு சமுர்த்தி லொத்தர் நிதி மூலமாக நிர்மானிக்கப்பட்ட வீடு திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவின் கோளாவில் 03 கிராமத்தில் வதியும் பயனாளி ஒருவருக்காக நிர்மானிக்கப்பட்ட வீடே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் முகாமையாளர் என்.கிருபாகரன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளி ஒருவருக்கு  சமுர்த்தி லொத்தர் காசோலையும் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில், முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன், கருத்திட்ட முகாமையாளர் ஆர்.மதியழகன், ஆலையடிவேம்பு தெற்கு வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார்; சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி சௌபாக்கியா வார தேசிய வேலைத்திட்டம் சமுர்த்தி திணைக்களத்தால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதி சமுர்த்தி சௌபாக்கியா வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்கீழ், சமுர்த்தி வங்கியினுடாக தொழில் முயற்சி கடன் வழங்கல், சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு திறப்பு விழா,  லொத்தர் மூலமாக வெற்றி பெற்றவர்களுக்கான காசோலை வழங்கல் மற்றும்  மலசல கூடங்கள் கையளிப்பு போன்ற திட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.