மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை கைப்பற்றியது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபையை  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளருக்கான தேர்வு இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்.ஐ.எம். இஸதீன் புதிய பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் தனது பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும்போது குற்றங்கள் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில் வடமாகாண ஆளுனரால் அன்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்வு இன்று இடம்பெற்றபோதே ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தவிசாளர் பதவியை கைப்பற்றியுள்ளது.

இவ் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்.ஐ.எம். இஸதீனும், தமிழ் தேசிய கூட்டமைப்பு  கொன்சன் குலாஸூம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் ஆகியோரும் போட்டியிட்டனர்.

வாக்கெடுப்பின் இறுதிச் சுற்றில்  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.எம். இஸதீன் 09 வாக்குகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கொன்சன் குலாஸ் 08 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட என்.செபமாலை பீரீஸ் 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அதிக வாக்குகள் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தவிசாளர் பதவியை கைப்பற்றியுள்ளது.

வாக்கெடுப்பு நடைபெற்றபோது  மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிர ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கு வந்திருந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட எவரும் பிரதேச சபை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன் மன்னார் பிரதேச சபையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இதேவேளை, புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான தேர்வை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு ஆளுநரால் அன்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னால் தவிசாளரால் மேன்றையீட்டு நிதிமன்றில் மனுத்தாக்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.