புதிய தவிசாளரை நியமிப்பதற்கான கூட்டம் : தடை செய்யகோரி மனுத் தாக்கல்

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிப்பதற்காக நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை தடை செய்து உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும், ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டவருமான ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹீர் என்பவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட 7 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் மனுதாரர் தமது மனுவில், ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி தன்னை பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கியதாகவும், விசாரணைகளின்போது தனது கருத்துக்களை முன்வைக்க நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்வதாக வட மாகாண ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.