சாய்ந்தமருதில் இளம் குடும்பஸ்தர் கொரோனாவுக்கு பலி; உயிரிழப்பு 16 ஆக உயர்வு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைவடைந்து வருகின்ற நிலையில், சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

இதன்படி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ள அதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 2841 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளில் 254 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது 04 பேர் மாத்திரமே கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 02 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய 26 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்று மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, இன்று திங்கட்கிழமை (27) முற்பகல் 10.00 வரையான 24 மணித்தியாலயத்தினுள் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவில் 09 பேர் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தகவல் வெளியிட்டுள்ளார்.