யாழ் அல்வாய் பகுதியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் : இரு வீடுகள் தீக்கிரை

யாழில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

யாழ் வடமாராட்சி, அல்வாய் வடக்கு, மகாத்மா கிராமத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழு ரவுடியான “வெட்டுகுமார்” என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள மேலும்  சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2 ம் திகதி மகாத்மா கிராமத்தை சேர்ந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும்  அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இரு வீடுகளுக்கு தீ வைத்ததுடன் மேலும் சில வீடுகளின் ஜன்னல்களை உடைத்தும், சொத்துக்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.

இந்நிலையில், குறித்த ரவுடி வெட்டிக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவனது சகோதரனான ஜெயா உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.