சந்தேக நபர் கைகளை கடித்ததால் பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கைதுசெய்ய முயன்ற பொலிஸார் இருவரின் கைகளை சந்தேக நபர் ஒருவர் கடித்ததால் குறித்த இரு பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது மாத்தறை, கந்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளதாவது,

வழக்கொன்றின் சாட்சியாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சாட்சியாளரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சாட்சியாளரின் வீட்டில் பொலிஸார் பாதுகாப்பு கடமையிலிருந்தபோது, குறித்த சந்தேகநபர் வாளுடன் அங்கு வந்துள்ளார். பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்தபோது அவர் பொலிஸாரின் கைகளை கடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த பொலிஸார் இருவரும் தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.