தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கவேண்டாம்!

(காரைதீவு  நிருபர் சகா)


தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினநிகழ்வுகளை  தடைசெய்யும் விதமாக கல்முனை  நீதவான் நீதிமன்றம் கல்முனையில் இருவருக்கு  தடை உத்தரவு கடிதத்தை வழங்கியுள்ளது.


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் ஆகியோருக்கு  அவர்களின் இல்லத்திற்கு சென்று கல்முனைப்பொலிசார் கையளித்தனர்.


கல்முனை தலைமையகப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தாக்கல்செய்த வழக்கினடிப்படையில், இந்த நீதவான் நீதிமன்ற கட்டளை பிறப்பித்துள்ளது. அதன்படி கல்முனைப்பிரதேச நியாயாதிக்க எல்லைக்குள் யுத்தத்தினால் இறந்தவர்களின் நினைவேந்தலையோ ,ஊர்வலங்களையோ, விளக்கேற்றலையோ நடாத்தமுடியாது.

இதேவேளை , இக்கட்டளையை வழங்கவந்த பொலிசார், மாநகரசபைஉறுப்பினருடன் ‘நீ ,நான்’ என தரக்குறைவாகக் பேசியதன் காரணமாக, சுமார் 15நிமிடநேரம் கையளிப்பு தடைபட்டது. 

இதுவிடயத்தை, உறுப்பினர் ராஜன் தலைமையப்பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி சுஜித்பிரியந்தவிடம் முறையிட்டுள்ளார்.அதன்பிறகே கடிதத்தை அவர் பெற்றுள்ளார்.