பொலிஸாரின் பெயரில் பண மோசடி செய்த இளைஞன் கைது

பொலிஸாரின் பெயரில் பண மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பணத்தை இழந்தவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே குறித்த சந்தேக நபர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப தகராரு ஒன்று தொடர்பில் மனைவியால் கனவருக்கெதிராக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்  அதற்காக பொலிஸாருக்கு  இலஞ்சமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என சந்தேக நபரால் கணவனிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கணவன் சார்பில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா குறித்த சந்தேக நபரிடம் வழங்கப்பட்டுள்ளது.

பணத்தைப் பெற்றுக்கொண்ட  சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் தரப்பினரால்  இது குறித்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட புத்தளம் தலைமையக பொலிஸார் புத்தளம், விருதோடைப் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.