பொத்துவில் அருகம்பை சுற்றுலா விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஏ.பி.எம்.அஸ்ஹர்
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருகம்பை சுற்றுலா விடுதியொன்றில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த சாரதியுடன் அவர் அருகம்பைக்கு வந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி இரவு வேறொரு விருந்தகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர் மறுநாள் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபரின் தொலைபேசி செயற்படவில்லை என அவரது மனைவி, சாரதிக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, சாரதி அவர் தங்கியிருந்த ஹோடடலில் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, சட்டவைத்திய அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். பின்னர் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்