ரூபா 18 மில்லியன் செலவில் நடைபாதை அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம்

நாட்டில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டம் குறித்து ஆராயும் கூட்டம் ​ நடைபெற்றது.

குறித்த கூட்டமானது,  மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகர முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதியின் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் அனைத்து வசதிகள் கொண்ட ஒரு நடைபாதையை அமைப்பதற்கு  நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைவாக சுமார் ரூபா 18 மில்லியன் செலவில் 300 மீற்றர் தூரம் கொண்ட குறித்த நடைபாதை அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆராயும் கூட்டமே நேற்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், குறித்த அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநகரசபை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில்,  மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.