O/L பரீட்சை பெறுபேற்று சான்றிதல் எதிர்வரும் திங்கட்கிழமை இணையத்தளத்தில்

அண்மையில் வெளியாகிய 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதல்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் பெற வேண்டி இருப்பின்  0112784208, 0112784537, 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது 1911 என்ற ஹொட்லைன் இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று சூழ்நிலை காரணமாக, அழகியல் பாட செயல்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை. பாடசாலைகள் மீள  ஆரம்பிக்கப்பட்டதும் அழகியல் பாடங்களின் செயல்முறைப்  பரீட்சைகள் நடத்தப்பட்டு பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு பரீட்சைப் பெறுபேறுகளை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.