இராசமாணிக்கம் கத்தினார். என்ன பிரயோசனம்.?

காரைதீவில் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீரதிசாநாயக்க முழக்கம்.
( வி.ரி.சகாதேவராஜா)


வேற அரசாங்கம் தற்போது இருந்திருந்தால் கொரோனவால் ஒரு லட்சம் பேர் செத்துமடிந்திருப்பர். எமது ராஜபக்ஸ அரசாங்கம் இன்று கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.எனவே மக்கள் இன்றைய அரசாங்கத்திற்கு நன்றிகூறவேண்டும்.

இவ்வாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க காரைதீவில் நேற்று(24)வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் பிரதே செயலக கேட்போர்கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தமிழில் உரையாற்றினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்:
தமிழ்த்தலைவர்கள் வெறுமனே பேசிப்பேசி காலத்தைகடத்துகிறார்கள். பராளுமன்றத்திலும் நாக்கிழிய கத்துவார்கள். இறுதியாக இராசமாணிக்கம் கத்தினார். என்ன பிரயோசனம்.? இவர்களால் தமிழ்மக்களுக்கு பச்சைத்தண்ணிகூட கிடைக்கவில்லை.தமிழ்மக்கள் படித்தவர்கள். இன்று இந்த கையறு நிலைமையில் இருப்பதற்கு காரணம் இந்த தலைவர்கள்தான்.இவர்களுக்கு பின்னால் இன்னமும் சென்றால் இருப்பதையும்  இழக்கவேண்டிவரும்.


கடந்தகால யுத்தத்தால் நாடே நாசமானதை அறிவோம். 1988 -89 காலப்பகுதியில் மட்டும் குறிப்பாக பிரேமதாச காலத்தில் 60ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல தமிழர்களும் இறந்தார்கள்..


தமிழ்ப்பிரதேசத்தில் பாடசாலை நடக்கவில்லை.கட்டடம் இல்லை ஆசிரியர்கள் இல்லை.அபிவிருத்தி இல்லை. பென்னுக்குப்பதிலாக கன்(துப்பாக்கி) தூக்கினார்கள்.
ஆனால் எமது ராஜபக்ச அரசாங்கமே தமிழ்பிள்ளைகளுக்கு துவக்குக்குபதிலாக பென் வழங்கியது. யாழ்ப்பாணம காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை கார்ப்பட்ட போட்டது. 
கல்முனை முதல் கொழும்புவரை கார்ப்பட் போட்டது.
அன்று அம்பாறையிலிருந்து திருகோணமலை போக 9மணித்தியாலயம் எடுத்தது. இன்று 3மணிநேரத்தில் செல்கிறோம்.


நான் 25வருடங்கள் அரசியல்வாதியாக இருக்கிறேன். கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சராகவிருந்தேன். ஜாதிமதபேதமின்றி அனைவருக்கும் உதவினேன்.
ஆனால் எனக்கு கல்முனையில் ஆக ஏழு வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. அது பரவாயில்லை. உங்கள்  பிரதிநிதிகளை அனுப்புங்கள். கலையரசன் இருந்து என்ன செய்ய? எமது அணியில் ஒருவரை அனுப்புங்கள். கூடிய அபிவிருத்தியைகாணலாம்.

கொரோனா இல்லாவிடின் இந்த நாடு இந்நேரம் மலேசியாவாக இருந்திருக்கும். கொரோன இருந்தபோதிலும் அபிவிருத்திப்பணிகள் தொடர்கின்றன. கிராமத்தில் ஒரு பிரிவுக்கு முதல் 20லட்சருபாவுக்கு வீதிகள் தந்தோம். தற்போது 30லட்சருபாவுக்கான வேலைத்திட்டங்களை முன்மொழிந்திருக்கிறீர்கள். அதைச்செய்வோம்.

காரைதீவுக்கென தனியான ஜஸ் பக்டரி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி மற்றும் பிரதான தபாலகத்திற்கான திருத்வேலைகளுக்கும் உதவவுள்ளோம்.
ஆனால்தேர்தல் வந்தால் சஜித் ரணில் நல்லம். ராஜபக்ச கொலைகாரன் என்று தூக்கிப்பிடிப்பார்கள்.உங்களிடையே மனமாற்றம் அவசியம்.

கொரோனாவுக்கு சீனா அரசாங்கம் எமது நாட்டிற்கு உதவுகின்றது. ஒரு ஊசிக்கு பத்தாயிரம் ருபா செலவாகிறது. நாட்டில் வருமானம் குறைவு. நாட்டில் 30லட்சம் பேருக்கு தொழில் இல்லை.ஆசிரியர்கள் சுகாதரத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் மேலதிக வேதனம் தேவையென்று .  செலவு கூட. எனினும் நாம் மக்களுக்கான அபிவிருத்திபணிகளை முன்னெடுத்துவருகின்றோம். ஒத்துழைத்தால் முன்னேறலாம். என்றார்.
பிரதிதிட்டமிடல்பணிப்பாளர் ரி.மோகனகுமார் நன்றியுரையாற்றினார்.