பல ஆண்டுகள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை

பல வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற அரசியல் கைதியே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இறுதி யுத்தம் இடம்பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான நடேசு குகநாதன் மீண்டும் கைதுசெய்யப்பட்டு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் 2009 ஓகஸ்ட் மாதம் பாரப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு  பூஸா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற கட்டளைப்படி புனர்வாழ்வுக்கு உட்படுத்த புனர்வாழ்வு நிறைவடைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 2013 ஆம் ஆண்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படாமலேயே சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த நடேசு குகநாதன் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.